குத்தகை காலம் 99க்கு பதில் 30 ஆண்டுகளாக குறைக்க முடிவு
குத்தகை காலம் 99க்கு பதில் 30 ஆண்டுகளாக குறைக்க முடிவு
ADDED : டிச 08, 2024 01:03 AM

சென்னை:அடுக்குமாடி தொழிற்கூடங்களின் குத்தகை காலத்தை, 99 ஆண்டுகளுக்குப் பதிலாக, 30 ஆண்டுகளாக குறைக்க, தமிழக அரசின் 'சிட்கோ' நிறுவனம் முடிவு செய்துஉள்ளது.
இந்தியாவில், நகரமயமாக்கல் அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. இதனால், சென்னை உட்பட முக்கிய நகரங்களில், புதிதாக தொழிற்பேட்டை அமைக்க இடம் கிடைப்ப தில் சிரமம் உள்ளது. குறுந்தொழில் நிறுவனங்களும், தொழில் மனைக்காக அதிக முதலீடு செய்ய வேண்டிஉள்ளது.எனவே,நிறுவனங்களின் முதலீட்டு செலவை குறைக்கவும், உடனடியாக தொழில் துவங்கவும் வசதியாக, சிட்கோ, 100 - 150 தொழிற்கூட அலகுகளுடன் கூடிய அடுக்குமாடி தொழில் வளாகங்களை கட்டி வருகிறது.
அதன்படி, சென்னை கிண்டியில், 152; அம்பத்துாரில், 112 தொழிற்கூட அலகுகளுடன் அடுக்குமாடி தொழில் கூடம் கட்டப்பட்டு, இந்தாண்டு துவக்கத்தில் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கோவை மாவட்டம் குறிச்சி, மதுரை சக்கிமங்கலம் தொழிற்பேட்டைகளில், அடுக்குமாடி தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.தற்போது, அடுக்குமாடி தொழிற்கூட அலகுகள், 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படுகின்றன.
அவற்றின் பராமரிப்பு பணிகளை, 'சிட்கோ' மேற்கொள்கிறது. குத்தகை காலத்தை குறைக்க, தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.எனவே, குத்தகை காலத்தை, 30 ஆண்டுகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அதற்கேற்ப தொழிற்கூட கட்டணமும் குறையும். குத்தகை காலம் முடிந்ததும், அதே நிறுவனங்களுக்கு அப்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, கட்டணம் நிர்ணயம் செய்யப்
பட்டு, குத்தகை காலம் புதுப்பிக்கப்படும்.