ADDED : ஆக 24, 2025 09:18 PM

கி ரெடிட் ஸ்கோர் தொடர்பான விழிப்புணர்விலும், அதிக கிரெடிட் ஸ்கோர் பெற்றிருப்பதிலும் டில்லி மக்கள் முன்னணியில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கிரெடிட் ஸ்கோர் என்பது கடன் தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவரது கடன் வரலாறு அடிப்படையில் இந்த ஸ்கோர் அமைகிறது.
கிரெடிட் ஸ்கோர் தொடர்பான விழிப்புணர்வு தேவை என வலியுறுத்தப்படும் நிலையில், இணைய நிறுவனம் பைசாபஜார், கிரெடிட் ஸ்கோர் தொடர்பான நிலையை அறிய கிரெடிட் பிரிமியர் லீக் எனும் பெயரில் போட்டி வடிவில் கருத்துக்கணிப்பை நடத்தியது.
இந்தியாவில் உள்ள 710 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் டில்லி மக்கள் அதிக விழிப்புணர்வு பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. கணிப்பில் டில்லியில் இருந்து பங்கேற்றவர்களின் சராசரி கிரெடிட் ஸ்கோர் 746 ஆக உள்ளது.
புனே நகரம் இரண்டாவது இடத்திலும், சண்டிகர் மற்றும் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த கணிப்பில், எட்டு சதவீதம் எனும் குறைந்த அளவிலேயே பெண்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் சென்னை உள்ளிட்ட தென்னக நகரங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.