செயற்கைக்கோளில் இருந்து நேரடி சேவை 'பி.எஸ்.என்.எல்., -- வயாசாட்' சோதனை வெற்றி இனி நெட்வொர்க், பிரத்யேக ஹார்டுவேர் தேவைப்படாது
செயற்கைக்கோளில் இருந்து நேரடி சேவை 'பி.எஸ்.என்.எல்., -- வயாசாட்' சோதனை வெற்றி இனி நெட்வொர்க், பிரத்யேக ஹார்டுவேர் தேவைப்படாது
ADDED : அக் 17, 2024 11:59 PM

புதுடில்லி,:செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக செல்போன் போன்ற தனிப்பட்ட சாதனங்களுக்கு இணைப்பு வழங்குவதை, பி.எஸ்.என்.எல்., உடன் இணைந்து வயாசாட் நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இதுகுறித்து வயாசாட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மண்டல நெட்வொர்க் இணைப்பு ஏதுமின்றி, இருவழி தகவல் மற்றும் அவசரகால அழைப்பான எஸ்.ஒ.எஸ்., ஆகியவற்றை செயற்கைக்கோளுக்கு அனுப்பி சோதனை நடத்தப்பட்டது.
சாத்தியம்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், நெட்வொர்க் இணைப்பு இல்லாமல், கிட்டத்தட்ட 36,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'எல் பேண்டு' செயற்கைக்கோளுடன் தகவல் பரிமாறப்பட்டது.
இந்த சோதனையின் முடிவால், பிரத்யேகமாக வன்பொருள் ஏதும் இல்லாமல், செயற்கைக்கோள் சேவைகளை நேரடியாக வழங்குவது சாத்தியம் என தெரிய வந்துள்ளது.
வயாசாட் செயற்கைக்கோள் நெட்வொர்க்கை பயன்படுத்தி, இந்திய நுகர்வோர், வணிகங்களுக்கு தகவல் தொடர்பு சேவை வழங்க இயலும்.
செயற்கைக்கோளில் இருந்து இணைப்பு ஏற்படுத்தும் முயற்சி, அண்மையில் நடந்த மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில், பொறியாளர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
இதனால், நெட்வொர்க் மற்றும் வன்பொருள் ஏதுமின்றி; செயற்கைக்கோள் வாயிலாக செல்போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கார்கள் நேரடி சேவைகளை பெறலாம்.
தொழிலக இயந்திரங்கள், பயண ஏற்பாட்டாளர்கள் செயற்கைக்கோள் சேவையை பிரத்யேக வன்பொருள் இல்லாமல் பெறலாம்.
பாதுகாப்பு அதிகரிக்கும்
இதுதொடர்பாக, இந்தியாவில் எங்கள் கூட்டாளியான பி.எஸ்.என்.எல்., உடன் இணைந்து 'டைரக்ட் டூ டிவைஸ்' எனப்படும் நேரடி சேவை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகளில் பாதுகாப்பை அதிகரிக்க உதவும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.