பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு
பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : ஆக 29, 2025 10:57 AM

புதுடில்லி: பருத்தி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கை, வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன், கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில், அடுத்த மாதம் 30ம் தேதி வரை பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் விதமாக, வரி விலக்கை டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய பொருட்களின் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் வரி, நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால், நம் நாட்டு பொருட்களுக்கான வரி விதிப்பு 50 சதவீதத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, அதிகம் பாதிக்கப்படக் கூடிய துறைகளில் ஒன்றான ஜவுளித்துறையினரின் சுமையை குறைக்கும் விதமாக, மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18ம் தேதிக்கு முன்பு வரை, பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. இதில் ஐந்து சதவீத சுங்க வரி, ஐந்து சதவீத விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி மற்றும் ஒரு சதவீத சமூக மேம்பாட்டு வரி அடங்கும்.
அரசின் இந்த முடிவு, பருத்தி கிடைப்பதை அதிகரித்து, ஜவுளித் துறையினரின் உள்ளீட்டு பொருள் செலவை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித் தன்மையை அதிகரிக்கவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலனை காக்கவும் இது உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

