ADDED : ஆக 09, 2025 12:45 AM

புதுடில்லி:மின்சார பேருந்துகள், லாரிகள், ஆம்புலன்ஸ்களுக்கான பிரதம மந்திரி இ - டிரைவ் திட்டத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மத்திய அரசால், பிரதம மந்திரி இ -டிரைவ் திட்டம் துவங்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு ஆதரவான, மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ், மானியம் வழங்கப்படுகிறது.
மின் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 10,900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வரும் 2026 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த இத்திட்டத்தை, தற்போது 2028 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மின்சார பேருந்துகள், லாரிகள், ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் இத்திட்டம் நீட்டிப்பு பொருந்தும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மின்சார இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான சலுகைகள் மற்றும் மானியம் 2026 மார்ச் 31 காலக்கெடுவுடன் முடிவடைய உள்ளது.