நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் 7.80 சதவீதம்; எதிர்பார்ப்புகளை கடந்து சாதனை
நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் 7.80 சதவீதம்; எதிர்பார்ப்புகளை கடந்து சாதனை
UPDATED : ஆக 30, 2025 10:39 AM
ADDED : ஆக 30, 2025 02:07 AM

புதுடில்லி; கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஏழு சதவீதத்துக்கு குறைவாகவே வளர்ச்சி இருக்கும் என, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கணித்திருந்த நிலையில், அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, கடந்த ஐந்து காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வளர்ச்சி, 6.50 சதவீதமாக இருந்தது.
விவசாய துறையின் சிறப்பான செயல்பாடே வளர்ச்சி அதிகரிக்க முக்கிய காரணம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. வர்த்தகம், ஹோட்டல், நிதி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைகள் துறை தொழில்களும் வளர்ச்சிக்கு வழிவகுத்தன.
கடந்த ஜூன் காலாண்டில் மொத்த கூட்டு வளர்ச்சி 7.60 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் இது 6.50 சதவீதமாக இருந்தது. சீனாவின் ஜூன் காலாண்டு வளர்ச்சி 5.20 சதவீதம் என்பதால், 7.80 சதவீத வளர்ச்சியுடன் வேகமாக வளர்ந்து வரும் உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது.
இதனிடையே, இந்திய பொருட்களின் இறக்குமதி மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ளதால், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, வரும் காலாண்டுகளில் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.