கவரிங் நகைக்கு தொழிற்பேட்டை கடலுாரில் அமைக்க முயற்சி
கவரிங் நகைக்கு தொழிற்பேட்டை கடலுாரில் அமைக்க முயற்சி
ADDED : ஜூலை 09, 2025 12:48 AM

சென்னை:கவரிங் நகை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தொழில் மனைகளை ஒதுக்கீடு செய்வதற்காக, தொழிற்பேட்டை அமைக்க கடலுார் மாவட்டம், லால்புரத்தில், 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம், தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனம் கேட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் கவரிங் நகை உற்பத்தியில் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அவை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றன.
எனவே, கவரிங் நகை உற்பத்தி செய்யும் தொழில்முனைவோர் பயன்பெறுவதற்கு கடலுார் மாவட்டம், சிதம்பரம் தாலுகாவில் உள்ள லால்புரத்தில் தொழிற்பேட்டை அமைக்க, 'சிட்கோ' முடிவு செய்து உள்ளது. இதற்காக அரசு நிலம், 10 ஏக்கரை ஒதுக்கீடு செய்யுமாறு கடலுார் மாவட்ட நிர்வாகத்திடம், சிட்கோ கேட்டுள்ளது.
இந்த தொழிற்பேட்டையில் உள்ள மனைகள், கவரிங் நகை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், பொது வசதி மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதனால், 1,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

