ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் ரூ.25,060 கோடிக்கு ஒப்புதல்
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் ரூ.25,060 கோடிக்கு ஒப்புதல்
ADDED : நவ 12, 2025 11:47 PM

புதுடில்லி: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு மொத்தம் 25,060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு முதல், வரும் 2030 - 31ம் நிதியாண்டு வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான கடன்களை எளிதாகவும், குறைந்த வட்டியிலும் வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு நிதி மற்றும் கடன் உதவி வழங்க 10,000 கோடி ரூபாயும்; சர்வதேச சந்தையில் இந்திய பொருட்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க 15,060 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, தீர்வுகளை நோக்கி, சர்வதேச வர்த்தக சவால்களை எதிர்கொள்ளும் விதமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

