தொழில்நுட்ப மேம்பாடு திட்டம் மானிய நிலுவை விடுவிப்புக்கு ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு
தொழில்நுட்ப மேம்பாடு திட்டம் மானிய நிலுவை விடுவிப்புக்கு ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு
ADDED : பிப் 04, 2024 01:06 AM

திருப்பூர்:தொழில்நுட்பத்தை மேம்படுத்தும், 'ஏ - டப்' திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, மானிய நிலுவையை கூடிய விரைவில் விடுவிக்கும் அரசு உத்தரவுக்கு, இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பான 'பியோ' வரவேற்பு தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு சார்பில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த, மானியம் வழங்கும், 'டப்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் காலாவதியான பின், திருத்தியமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் 'ஏ - டப்' நடைமுறையில் இருந்தது.
இதன் கீழ் இயந்திரங்களை இறக்குமதி செய்ய, 30 சதவீதம் வரை மானிய உதவி கிடைத்தது. 2023 மார்ச் 31 உடன், இத்திட்டமும் காலாவதியாகிவிட்டது. ஏ - டப் திட்டம் கட்டாயம் நீட்டிக்கப்படும் என்று, அரசு தரப்பு உறுதியளித்ததால், தொழில் துறையினர் இயந்திரங்களை இறக்குமதி செய்தனர். நடப்பு நிதியாண்டில் இதுவரை, அத்திட்டத்தில் மானிய உதவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து, இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பான பியோ தலைவர் சக்திவேல் கூறியதாவது:
ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் மறைமுக வரியை திருப்பி அளிக்கும் திட்டம், வரும் மார்ச் 31ல் முடிகிறது. இடைக்கால பட்ஜெட்டில், இத்திட்டம், 2026 மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுமென அறிவித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஏ - டப் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதையும் வரவேற்கிறோம்.
குறிப்பாக, பின் தேதியிட்டு, ஏ - டப் திட்டத்தை நிறைவேற்றி, நிலுவையில் உள்ள மானியமும் கூடிய விரைவில் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதன் மூலம், ஏற்றுமதியாளர்களின் போட்டித்திறன் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.