ADDED : செப் 28, 2025 08:12 PM

புதிய முதலீட்டாளர்கள், பரபரப்பாக இயங்கும் தொழில்முறை பணியாளர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு 'நிதிகளின் நிதி' ஏற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது.
மி யூச்சுவல் பண்ட் பரப்பில் உள்ள பலவகையான நிதிகளில், 'நிதிகளின் நிதி” என சொல்லப்படும் திட்டங்கள் முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றன. ஸ்மால் கேப் நிதிகள், பன்னாடு நிதிகள், ஐ.டி., நிதிகள் போன்றவை வெவ்வேறு காரணங்களுக்காக நாடப்படும் நிலையில், 'பண்ட் ஆப் பண்ட்ஸ்' என குறிப்பிடப்படும் “நிதிகளின் நிதி” திட்டங்கள் அண்மை காலமாக சில்லறை முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்படுகின்றன.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 28 ஆயிரம் கோடிக்கு அதிகமாக இந்த வகை நிதிகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் புதிய நிதிகளும் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
விரிவாக்கம்
மற்ற மியூச்சிவல் பண்ட் திட்டங்கள் போல பங்குகள் அல்லது பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்யாமல், இவ்வாறு செய்யும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவையாக நிதிகளின் நிதி அமைகின்றன. பல மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதால், இவை உடனடியாக விரிவாக்கத்தின் பலனை அளிப்பதாக கருதப்படுகிறது.
எந்த வகை மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது என தடுமாறுவதைவிட, பொருத்தமாக நிதிகளின் நிதியில் முதலீடு செய்வது, முதலீட்டாளர்கள் விரும்பும் விரிவாக்கத்தை அளிப்பதோடு, அதற்கேற்ற பலனையும் அளிக்கின்றன.
மியூச்சுவல் பண்ட்களில் பல வகையான நோக்கம் கொண்டவை இருப்பதால், நிதிகளின் நிதி பொதுவாக அவற்றின் பலனை கூட்டாக அளிக்க வல்லவையாக பார்க்கப்படுகின்றன.
இந்த வகை நிதிகளை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கையில் வைத்திருந்தால், வருமான வரி வரம்பிற்கு ஏற்ற வரி விதிப்பு மாறாக, 12.5 சதவீத நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு உட்படுத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதும் இவற்றின் மீதான ஈர்ப்பு அதிகரிக்க காரணம் ஆகியிருக்கிறது.
புதிய நிதிகள்
முதலீட்டாளர்கள் ஆர்வத்திற்கு ஏற்ப, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் புதிய நிதிகளின் நிதியை அறிமுகம் செய்கின்றன. வழக்கமாக இந்த வகை நிதிகள் கடன்சார் கலவை சார்ந்த நிதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததற்கு மாறாக, தற்போது கடன்சார் மற்றும் சமபங்கு நிதிகளிலும் இவை முதலீடு செய்யத்துவங்கியுள்ளன.
இந்த போக்கு முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை அதிகமாக்கியுள்ளது. அதே போல, தங்கம் அல்லது வெள்ளி இ.டி.எப்., திட்டங்களை நாடுபவர்களுக்கும் இவை ஏற்றதாக அமைந்துள்ளன.
நிதிகளின் நிதி பல்வேறு கோட்பாடுகளுக்கு ஏற்ப வல்லுனர் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தவறவிடும் அல்லது தேர்வு செய்யாத பிரிவுகளின் முதலீடு பலனையும் பெற இவை உதவுகின்றன.
பொதுவாக புதிய முதலீட்டாளர்கள், பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் தொழில்முறை பணியாளர்கள் மற்றும் நன்கு தேர்வு செய்யப்பட்ட முதலீடு தொகுப்பை விரும்புகிறவர்களுக்கு இவை ஏற்றவை. பொதுவாக, மியூச்சுவல் பண்ட் திட்டங்களை அலசி ஆராய நேரம் இல்லாதவர்கள், அவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியாதவர்களுக்கு இவை உகந்தவை.
அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் இவற்றை கட்டுப்பாடு கொண்டவையாக கருதலாம். இவற்றின் செலவு விகிதமும் பாதகமான அம்சமாக பார்க்கப்படலாம். எனினும் விரிவாக்கத்தின் பலன் பலமாக அமைகிறது.