மூன்றே நாட்களில் ரூ.10,000 கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
மூன்றே நாட்களில் ரூ.10,000 கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்
ADDED : ஏப் 06, 2025 01:02 AM

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால், உலக பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையின் காரணமாக, கடந்த வாரம், அன்னிய முதலீட்டாளர்கள் 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இந்திய பங்குகளை விற்றுஉள்ளனர்.
என்.எஸ்.டி.எல்., எனும் தேசிய பத்திர டிபாசிட் நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த 2, 3, 4 ஆகிய தேதிகளில் மட்டும், அன்னிய முதலீட்டாளர்கள் 10,355 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
கடந்த 2ம் தேதி, உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த டிரம்ப், அந்த நாளை, 'அமெரிக்க விடுதலை நாள்' என குறிப்பிட்டார். இந்நடவடிக்கையால், இந்தியா உட்பட உலகெங்கும் பங்குச் சந்தைகளில் சரமாரியாக பங்குகள் விற்கப்பட்டன. அமெரிக்க சந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
வரி விதிப்பு அறிவிப்புக்கு அடுத்த இரண்டு நாட்களில், அமெரிக்க பங்குச் சந்தைகள் அதன் சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட 464 லட்சம் கோடி ரூபாயை இழந்தன.
இதுமட்டுமல்லாமல், அமெரிக்க கடன் பத்திர சந்தை மற்றும் புதிய பங்கு வெளியீட்டு சந்தையும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. பத்திர மற்றும் பங்கு வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்த நிறுவனங்கள், அந்த முடிவை ஒத்திவைத்துள்ளன.
சந்தைகளின் போக்கை கணிக்க முடியாத நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் பொறுமையை கடைப்பிடிப்பர் என்றும், அடுத்த சில மாதங்களுக்கு பெரிய அளவில் அன்னிய முதலீடுகளை எதிர்பார்க்க முடியாது என்றும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த மார்ச் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்களின் இந்திய பங்குகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 35,574 கோடி ரூபாய்க்கு இந்திய பங்குகளை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் இது 3,973 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மார்ச் கடைசி வாரத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் கூடுதலாக முதலீடு செய்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.