தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு அரசிடம் உறுதி அளித்தது 'பாக்ஸ்கான்'
தமிழகத்தில் ரூ.15,000 கோடி முதலீடு அரசிடம் உறுதி அளித்தது 'பாக்ஸ்கான்'
ADDED : அக் 13, 2025 10:58 PM

சென்னை : தைவான் நாட்டை சேர்ந்த, 'பாக்ஸ்கான்' நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, தமிழக அரசிடம் நேற்று உறுதி அளித்துள்ளது. இந்நிறுவனம் தமிழகத்தில், அதிகளவில் முதலீடு செய்வதால், விரைவாக ஒப்புதல் அளிக்க, வழிகாட்டி நிறுவனத்தில் தனி அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகில் சுங்குவார்சத்திரத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. அங்கு, அமெரிக்காவின், 'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஐபோன்' பாகங்களை ஒருங்கிணைத்து, பல நாடுகளுக்கு போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது, பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில், மேலும் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதை, அந்நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியும், உலகளாவிய மூத்த நிர்வாகியுமான ராபர்ட் வூ தலைமையிலான பிரதிநிதிகள், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் ராஜாவை நேற்று சந்தித்து உறுதி செய்தனர்.
பேட்டரி தொழில்நுட்பம், ஏ.ஐ., சார்ந்த உற்பத்தி போன்றவற்றில் பாக்ஸ்கான் முதலீடு செய்ய உள்ளது. இந்நிறுவனம், தமிழகத்தில் தொடர்ந்து அதிக முதலீடு செய்வதால், இதற்காக வழிகாட்டி நிறுவனத்தில் தனி அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
அங்கு நியமிக்கப்படும் அதிகாரிகள், பாக்ஸ்கானின் தொழில் திட்டங்களுக்கு தேவைப்படும் அனுமதிகளை பல்வேறு அரசு துறைகளிடம் இருந்து விரைவாக பெற்று தரும் பணியில் ஈடுபடுவர்.
இதுகுறித்து, அமைச்சர் ராஜா கூறுகையில், 'பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 14,000 உயர் வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்கிறது.
'இது, தமிழக மின்னணு மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கு மற்றொரு பெரிய ஊக்குவிப்பாக அமையும்' என்றார்.
பேட்டரி தொழில்நுட்பம், ஏ.ஐ., சார்ந்த உற்பத்திக்கு பாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு தமிழகத்தில் பாக்ஸ்கான் கூடுதல் முதலீட்டால், 14,000 புதிய வேலைவாய்ப்பு உருவாகும் தொடர் முதலீட்டால், பாக்ஸ்கானுக்கென ஒப்புதல் தர வழிகாட்டி நிறுவனத்தில் தனி அமர்வு