ADDED : அக் 13, 2025 10:59 PM

புதுடில்லி ': பணியாளர்கள் தங்களது பி.எப்., கணக்கில், 25 சதவீத குறைந்தபட்ச இருப்பு போக, மீதமுள்ள தொகையில் 100 சதவீதம் வரை பணத்தை திருப்பி எடுக்க, இ.பி.எப்.ஓ., அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இ.பி.எப்.ஓ., குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி இ.பி.எப்.ஓ., கணக்கில் இருந்து பகுதி வாரியாக பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. பணம் எடுப்பதற்கான காரணங்கள், 13 பிரிவுகளில் இருந்து மூன்று வகையாக குறைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவை, வீட்டுவசதி தேவை மற்றும் சிறப்பு சூழல். சிறப்பு சூழல்களுக்காக பணம் எடுக்க வேண்டுமென்றால், காரணம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
இனி, சிறப்பு அசாதாரண சூழல் என்பதை தேர்வு செய்து, விளக்கமான காரணம் தெரிவிக்காமல் 100 சதவீதம் வரை பணம் எடுக்க முடியும். இதில் பணியாளர் மற்றும் நிறுவனம், இருவரின் பங்கில் இருந்தும் பணம் எடுக்கலாம்.
குறைந்தபட்சம் 12 மாதங்கள் பணியாற்றி இருந்தாலே பணம் எடுக்க அனுமதிக்கப்படும். இது நாள் வரை, அவசர காரணங்களுக்கு தவிர மற்ற அனைத்து காரணங்களுக்கும் ஐந்து முதல் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டியது கட்டாயமாகும்.