'சிறு, நடுத்தர முதலீட்டு பிரிவில் மோசடியாக விலை ஏற்ற இறக்கம்'
'சிறு, நடுத்தர முதலீட்டு பிரிவில் மோசடியாக விலை ஏற்ற இறக்கம்'
ADDED : மார் 12, 2024 06:55 AM

மும்பை : சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முதலீட்டு பிரிவில், மோசடியாக விலை ஏற்ற இறக்கங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, 'செபி' தலைவர் மாதபி புரி புச் தெரிவித்துள்ளார்.
புதிய பங்கு வெளியீடு மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டிலும் இந்த மோசடி விலை ஏற்ற இறக்கம் நடைபெறுவதாகவும், முதலீட்டாளர்கள் இது தொடர்பாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: சிறு மற்றும் நடுத்தர முதலீட்டு பிரிவில், மோசடியான விலை ஏற்ற இறக்கங்களுக்கான அறிகுறிகளை செபி கண்டறிந்துள்ளது; அதற்கான தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. எனினும், இவை எல்லாம் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறதே தவிர, நிலைமை இன்னும் கை மீறி போய்விடவில்லை.
இது தொடர்பான முழு தகவல்களையும் அறிய மற்றும் தரவுகளை ஆராய, செபி பல்வேறு ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அது தொடர்பாக அடுத்த நாளே பொது ஆலோசனை நடத்தப்படும்.
முதலீட்டாளர்கள், பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து, சிறு மற்றும் நடுத்தர பிரிவு பண்டு முதலீடு மாறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தகவல்கள் தொடர்பான விதிகளும் மாறுபடும்.
இப்பிரிவை நிர்வகிக்கும் விதிமுறைகள், வழங்கப்பட வேண்டிய தகவல்கள், 'ரிஸ்க்' தன்மை அனைத்துமே பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து வேறுபட்டவை.
சிறு மற்றும் நடுத்தர பிரிவு முதலீட்டில் ஈடுபட்டு வரும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், வரும் மார்ச் 15ம் தேதி முதல், 'ஸ்ட்ரெஸ் டெஸ்டிங் டேட்டா' குறித்த தகவல்களை அவர்களது இணையதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது, அசாதாரண சுழல் ஏற்படும்போது, பண்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டை எவ்வளவு காலத்துக்குள் மீட்டெடுப்பர் என்பதை முதலீட்டாளர்கள் கண்டறிய உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.

