ADDED : ஆக 17, 2025 06:38 PM

முன்னணி மியூச்சுவல் பண்டு திட்டங்களில், எஸ்.ஐ.பி., எனும் சீரான முதலீட்டு முறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, பத்தாண்டுகளில் அதிக பலன் அளித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மியூச்சுவல் பண்டு திட்டங்களில் சீரான முறையில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி., முறை உதவுகிறது. இந்த வகையிலான முதலீடுகளை வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் ஆய்வு செய்தது. ஐந்தாண்டு மற்றும் பத்தாண்டு கால அளவு மற்றும் குறைந்தபட்சம், 10,000 ரூபாய் மாத முதலீடு ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், முன்னணி மியூச்சுவல் பண்டு திட்டங்களில் எஸ்.ஐ.பி., முறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, பத்தாண்டு காலத்தில் 10 சதவீதத்திற்கு மேல் பலன் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லார்ஜ் கேப் நிதிகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டில், ஐந்தாண்டுகளில் ஆண்டு அடிப்படையில் 17 சதவீத பலனும், பத்தாண்டுகளில் 16 சதவீத பலனும் கிடைத்துள்ளது. லார்ஜ் மற்றும் மிட்கேப் நிதிகளில் இது, 19 மற்றும் 18 சதவீதமாக உள்ளது.
பிளக்சி கேப் நிதிகள், 20 சதவீத அளவிலான பலனை அளித்துள்ளன. மல்டி கேப் வகை நிதிகள், 21 மற்றும் 18 சதவீத அளவிலான பலனை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.