சோலார், மின்னணு உதிரிபாகம் தமிழகத்தில் வாங்க ஜெர்மனி விருப்பம்
சோலார், மின்னணு உதிரிபாகம் தமிழகத்தில் வாங்க ஜெர்மனி விருப்பம்
ADDED : ஜன 11, 2025 09:58 PM

சென்னை:ஜெர்மனி நாட்டில், எலக்ட்ரானிக்ஸ், 'சோலார்' எனப்படும் சூரியசக்தி மின் சாதனங்கள், வாகனம் ஆகிய துறைகளுக்கான உதிரி பாகங்களுக்கு அதிக சந்தை வாய்ப்புள்ளது. இவற்றை, தமிழக சிறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க, அந்நாட்டு தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
இந்நிறுவனங்களின் தயாரிப்புகளை, ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், சந்தை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் முயற்சியில், காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் மற்றும் கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் செல்வம், கிண்டி தொழிற்பேட்டை சங்க தலைவர் கிரிஷ் பாண்டியன் கூறியதாவது:
ஜெர்மனியில் அதிக தொழில் நிறுவனங்கள் உள்ளன. அந்நிறுவனங்களுடன் தொழில் செய்வதற்கு, தமிழக சிறு நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.
எனவே, ஜெர்மனி தமிழ் சங்கத்தின், 'ஜி.ஐ.பி.ஏ.,' அதாவது, 'ஜெர்மனி இந்தியன் பிசினஸ் அலையன்ஸ்' எனப்படும் தொழில் வர்த்தக பிரிவினர், கிண்டி தொழிற்பேட்டைக்கு இம்மாதம், 10ம் தேதி அழைத்து வரப்பட்டனர்.
ஜெர்மனியில் என்னென்ன பொருட்களுக்கு தேவை உள்ளது, அதற்கான சந்தை வாய்ப்பு உள்ளிட்ட விபரங்களை, தமிழக சிறு தொழில் நிறுவனங்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில், சோலார், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், எலக்ட்ரிகல் ஆகிய தொழில் துறைகளுக்கு தேவைப்படும் உதிரி பாகங்களுக்கு அதிக சந்தை வாய்ப்பு உள்ளதாகவும், இதை தமிழகத்தில் இருந்து வாங்க விருப்பம் காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.
அதற்கு ஏற்ப, தமிழக நிறுவனங்கள், ஜெர்மனி அதிகளவில் பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவிட, ஜி.ஐ.பி.ஏ., உடன் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

