ADDED : ஜூன் 18, 2025 11:56 PM

புதுடில்லி:அலாயில் ஒரு சதவீதத்துக்கு மேல் தங்கம் கலந்திருந்தாலும் வரிவிலக்கு பொருந்தாது என, அன்னிய வர்த்தக கண்காணிப்பு இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, பல்லேடியம், ரோடியம், இரிடியம் அலாய் இறக்குமதி மீது புதிய கட்டுப்பாடு அமலாகியுள்ளது.
இந்த வகை அலாய்களில் தங்கத்தை அதிகளவில் கலந்து, வரிஏய்ப்பு செய்து, அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக, அண்மையில் தகவல் வெளியானது. இதையடுத்து, நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு, சட்டத்தின் ஓட்டையை தனது நடவடிக்கை வாயிலாக அடைத்துள்ளது.
அரிய உலோகங்கள் வரிசையில் சேர்க்கப்படாத பல்லேடியம், ரோடியம், இரிடியம் ஆகியவை அலாய் வடிவில் இறக்குமதி செய்ய முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. தங்கம் இறக்குமதி மீது 6 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில், அலாயில் தங்கத்தை கலந்து வரியின்றி இறக்குமதி செய்து, இந்தியா வந்ததும் ஆய்வகங்களில் பிரித்தெடுத்து வந்தது குறித்து செய்திகள் வெளியாகின.
இதனால், ஆண்டுக்கு அரசு 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பை சந்தித்த நிலையில், அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.