மக்காச்சோளத்துக்கு கூடுதல் வரி ரத்து 6 மாதமாக வெளியாகாத அரசாணை
மக்காச்சோளத்துக்கு கூடுதல் வரி ரத்து 6 மாதமாக வெளியாகாத அரசாணை
ADDED : செப் 25, 2025 02:29 AM

கோவை:மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத கூடுதல் வரி வசூலிப்பதை ரத்து செய்து அறிவிப்பு வெளியாகி, ஆறு மாதங்களாகியும், இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 39 விதமான வேளாண் விளைபொருட்களுக்கு ஒரு சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. 2024 டிச., 17ல், மக்காச்சோளத்தின் மீதான கூடுதல் வரி, மேலும் 23 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தி, வேளாண் உற்பத்திப் பொருட்கள் துறை அறிவிப்பு வெளியிட்டது. இது, விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் நேரடியாக கூடுதல் வரி செலுத்த வேண்டியதில்லை எனினும், வியாபாரிகள் அத்தொகையை விவசாயிகளிடம் பிடித்தம் செய்வர் என்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.
மக்காச்சோளத்துக்கு சந்தைக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என, மார்ச் 6ல், வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி அறிவித்தார். ஆனால், அதற்கான அரசாணை நேற்று வரை வெளியாகவில்லை.
திருவாரூரை சேர்ந்த யுக்திநாதன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விக்கு, அரசு துணைச் செயலாளர் ரேணுகாதேவி பதில் அளித்துள்ளார்.
'மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத கூடுதல் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் 1987ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டப்பிரிவு 9 (1டி) தொடர்பான கோப்பு, அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆணை வெளியிட்ட பின், தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களாகியும் அரசாணை வெளியிடப்படாதது விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.