'சாட்காம்' சேவை நிறுவனங்களுக்கு அரசின் விதிமுறைகள் வெளியீடு
'சாட்காம்' சேவை நிறுவனங்களுக்கு அரசின் விதிமுறைகள் வெளியீடு
ADDED : மே 07, 2025 11:23 PM

புதுடில்லி:இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், உள்நாட்டில் மட்டுமே தரவுகள் சேமிப்பது அவசியம் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இந்தியாவில் செயற்கைக்கோள் வழி இணைய சேவை துவங்குவதற்கு பார்தி குழுமத்துக்கு சொந்தமான 'ஒன்வெப்' மற்றும் ரிலையன்சின் 'ஜியோ சாட்காம்' நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளன. எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' மற்றும் குய்பர், குளோபல்ஸ்டார் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள், டிராய் அமைப்பின் பரிசீலனையில் உள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள, சாட்காம் சேவை நிறுவனங்களுக்கான முக்கிய விதிமுறைகள்:
அடிப்படை செயல்பாடுகளான சட்டப்பூர்வ இடைமறித்தல் வசதி, பயனர் முனையங்களை கண்காணித்தல், கட்டுப்படுத்தல், பயனர் தரவுகள், தரவுகளை கட்டுப்படுத்தும் உபகரணங்கள், நெட்வொர்க் கட்டுப்பாடு, கண்காணிப்பு உள்ளிட்டவை இந்தியாவில் அமைத்திருக்க வேண்டும்.
இந்திய பயனர்களின் தரவுகள், எந்தவொரு வெளிநாடுக்கும் பகிரப்படக் கூடாது. இந்திய தொலைதொடர்பு தரவுகளை பகிர மாட்டாம் என உரிமம் கோரும் விண்ணப்பத்தில் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
மேலும், பயனர் முனையங்களின் முகவரி அல்லது பிற தனிப்பட்ட தகவல்கள், வெளிநாட்டின் எந்தவொரு பகுதியில் காணும் வகையிலோ, அணுகும் வகையிலோ இருக்கக் கூடாது.
வணிக ரீதியான செயல்பாடுகள் துவங்கிய 5 ஆண்டுக்குள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 சதவீதம், செயற்கைக்கோள் நெட்வொர்க் அமைப்பை இந்தியமயமாக்க வேண்டும்.