'தனியார்கள் தொழிற்பேட்டை அமைக்க அரசு ரூ.15 கோடி மானியம் வழங்கும்'
'தனியார்கள் தொழிற்பேட்டை அமைக்க அரசு ரூ.15 கோடி மானியம் வழங்கும்'
ADDED : மார் 26, 2025 11:25 PM

சென்னை:''இருபதுக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் இணைந்து, 10 ஏக்கர் நிலத்துடன் தொழிற்பேட்டை அமைக்க முன்வந்தால், அரசு 15 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கி உதவி செய்யும்,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - அம்மன் அர்ஜூனன்: கோவை வடக்கு தொகுதி, வீரகேரளம், வடவள்ளி, சங்கனுார், தெலுங்குபாளையம், கணபதி கிழக்கு, மேற்கு ஆகிய இடங்களில், தொழிற்பேட்டைகள் அமைக்க, அரசு முன்வருமா?
அமைச்சர் அன்பரசன்: கோவை வடக்கு தொகுதி அருகில் அமைந்துள்ள குறிச்சி, காளப்பட்டி, மலுமாச்சம்பட்டி ஆகிய இடங்களில், அரசு தொழிற்பேட்டைகள் உள்ளன. இது தவிர, இரண்டு தனியார் தொழிற்பேட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சொலவம்பாளையத்தில், தனியார் தொழிற்பேட்டை அமைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. எனவே, அப்பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
எம்.எல்.ஏ.,க்கள் தொகுதியில், குறைந்தபட்சம் 15 ஏக்கர் தகுதியான அரசு புறம்போக்கு நிலம் இருந்தால், துறை சார்பில் ஆய்வு செய்து, 'சிட்கோ' வாயிலாக தொழிற்பேட்டை அமைத்து தரப்படும்.
இருபதுக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கூட்டாக சேர்ந்து, குறைந்தபட்சம் 10 ஏக்கர் நிலத்துடன், தனியார் தொழிற்பேட்டை அமைக்க முன்வந்தால், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அரசு 15 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கி, உதவி செய்யும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.