துாத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் நிலையம்
துாத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் நிலையம்
ADDED : செப் 10, 2025 12:12 AM

புதுடில்லி:பசுமை எரிசக்தி தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதற்காக, என்.டி.பி.சி., க்ரீன் எனர்ஜி நிறுவனம், துாத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, வ.உ.சி., துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
மேலும், துறைமுக செயல்பாடுகளில், பெட்ரோல், டீசல் எரிபொருள்களை பயன்படுத்தும் டிரக்குகளுக்கு மாற்றாக, ஹைட்ரஜன் பயன்படுத்தும் டிரக்குகளை பயன்படுத்தவும் என்.டி.பி.சி., க்ரீன் எனர்ஜி முடிவு செய்துள்ளது.
துாய்மையான மற்றும் பசுமை எரிபொருள் பயன்பாடு வாயிலாக கார்பன் உமிழ்வை குறைக்கவும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.பி.சி., க்ரீன் எனர்ஜி நிறுவனம், குஜராத் மாநிலம் சூரத்தில், பசுமை ஹைட்ரஜன் கலப்புத் திட்டத்தை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தி வருகிறது. மேலும் லே, லடாக், கிரேட்டர் நொய்டா, உத்தர பிரதேசம், புவனேஸ்வர், ஒடிசா ஆகிய இடங்களிலும் இதேபோன்ற ஹைட்ரஜன் போக்குவரத்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.