'ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ.3,700 கோடி இழப்பு'
'ஜி.எஸ்.டி., சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ.3,700 கோடி இழப்பு'
ADDED : செப் 05, 2025 10:52 PM

புதுடில்லி:ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு நடவடிக்கையால், நடப்பு நிதியாண்டில், அரசுக்கு குறைந்தபட்ச வருவாய் இழப்பு 3,700 கோடி ரூபாயாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., நான்கு அடுக்கில் இருந்து 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டதுடன், பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் 22ம் தேதி முதல் புதிய ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு நடவடிக்கையால், ஆண்டுக்கு 48,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என, மத்திய அரசு மதிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், எஸ்.பி.ஐ., கூறியதாவது:
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு வளர்ச்சி மற்றும் நுகர்வை ஊக்குவிக்கும் என்பதால், குறைந்தபட்ச வருவாய் இழப்பு 3,700 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது நிதி பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
கடந்த 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டபோது, சராசரியாக 14.4 சதவீதமாக இருந்த வரி விகிதம், தற்போது 9.5 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 295 அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் அல்லது பூஜ்யமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இதனால், சில்லரை விலை பணவீக்கம், நடப்பு நிதியாண்டில், 25 முதல் 30 அடிப்படை புள்ளிகள் குறைய வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, 2026- - 27ம் நிதியாண்டில், சில்லரை விலை பணவீக்கம் 65 முதல் 75 புள்ளிகள் குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.