எச்.சி.எல்., - பாக்ஸ்கான் சிப் ஆலை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
எச்.சி.எல்., - பாக்ஸ்கான் சிப் ஆலை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : மே 15, 2025 01:44 AM

புதுடில்லி:எச்.சி.எல்., மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து, 3,706 கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு ஆலை அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜெவர் நகரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலையில், வரும் 2027ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்படும் என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துஉள்ளார்.
இதன் வாயிலாக 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 76,000 கோடி ரூபாய் மதிப்பிலான, மத்திய அரசின் 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன்' திட்டத்தின் கீழ், ஒப்புதல் பெறும் ஆறாவது திட்டம் இதுவாகும். 3,706 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலையில், 1,500 கோடி ரூபாயை மத்திய அரசு ஊக்கத்தொகையாக வழங்க உள்ளது.
மொபைல் போன், லேப்டாப், வாகனம், கணினி என பல்வேறு விதமான உபகரணங்களுக்கு தேவையான டிஸ்பிளே சிப்களும் இங்கு தயாரிக்கப்பட உள்ளன. சிப் அசெம்பிளிங் மற்றும் பேக்கேஜிங் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்துக்கு 3.60 கோடி சிப்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும்; இந்த வகை சிப்களுக்கான நாட்டின் தேவையில் 40 சதவீதம், இந்த ஆலை வாயிலாகவே பூர்த்தி செய்யப்படும் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிப்பு ஆலை அமைக்க இருந்த நிலையில், சில காரணங்களுக்காக இத்திட்டம் கைவிடப்பட்டது.