உயருது சோலார் பேனல் விலை மின் உற்பத்தியாளர்கள் கவலை
உயருது சோலார் பேனல் விலை மின் உற்பத்தியாளர்கள் கவலை
ADDED : நவ 25, 2024 01:01 AM

புதுடில்லி:சோலார் பேனல் தயாரிப்புக்கான மூலக் கூறுகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதிக்கு அளித்த வரிச்சலுகையை சீனா குறைத்துள்ளதை யடுத்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்களின் விலை உயர வாய்ப்புள்ளதால், இந்திய உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒன்றான சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான ஏற்றுமதி மானியத்தை டிசம்பர் முதல், 13 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைப்பதாக சீன அரசு அறிவித்து உள்ளது. இதனால், இறக்குமதி செலவு அதிகரித்து, சோலார் மின் திட்டங்களின் செலவை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது.
இறக்குமதி செலவுகள் அதிகரிப்பால், எதிர்காலத்தில் நடைபெறும் ஏலம் மற்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களில் அவை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் இந்தியாவில் இறக்குமதியாகும் சோலார் செல்களின் விலை 40 சதவீதமும், சோலார் கண்ணாடி விலை 10 சதவீதம் அளவுக்கும் விலை உயரக்கூடும் என்கின்றனர், இத்துறையினர்.