ADDED : மே 04, 2025 09:29 PM

சென்னை:புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு முதலீடு, 2ம் கட்ட மெட்ரோ திட்டம் உள்ளிட்ட காரணங்களினால், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலங்களில் சென்னையில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக, கிரெடாய் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ரெப்போ வட்டி விகித குறைப்பு மற்றும் மத்திய அரசின் திருத்தப்பட்ட வருமான வரி அடுக்குகள் மற்றும் புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு முதலீடு, 2ம் கட்ட மெட்ரோ திட்டம் உள்ளிட்ட காரணங்களினால், மார்ச் காலாண்டில் வீடு விற்பனை அதிகரித்து உள்ளது.
ஆர்வம்
இந்த மூன்று மாத காலத்தில் குடியிருப்புகளின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 3,783 ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டு காலகட்டத்தை விட, இது 27 சதவீதம் அதிகமாகும். சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் திட்டமானது புதிய உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் 2ம் கட்ட மெட்ரோ திட்டம் போன்றவற்றால் உந்தப்படுகிறது.
தற்போது புதிய விமான நிலையம் வரவிருக்கும் பரந்துார், மீஞ்சூர், செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளிலும், வீடு வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எதிர்பார்ப்பு
ஆகையால், வரும் காலாண்டுகளில் இப்பகுதிகளிலும் குடியிருப்புகளுக்கான திட்டங்கள் தொடர்ச்சியாக வேகம் காட்டும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுதும் மொத்த குடியிருப்புகளுக்கான பதிவுகளின் எண்ணிக்கை 9,480 ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.