UPDATED : பிப் 01, 2024 03:09 AM
ADDED : பிப் 01, 2024 12:05 AM

புதுடில்லி: மொபைல் போன் உதிரிபாகங்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரியை, 15 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பேட்டரிக்கான கவர்கள், பிரதான கேமரா லென்ஸ்கள், பின்புற கவர்கள், பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தாலான இயந்திர பொருட்கள், ஜி.எஸ்.எம்., ஆன்டெனா போன்ற பாகங்களுக்கு இறக்குமதி வரி, 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உள்ளீட்டு பொருட்களுக்கான இறக்குமதி வரியையும், பூஜ்ஜியமாக குறைத்துள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை உலகின் ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான முயற்சியை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும், சீனா, வியட்நாம், மெக்சிகோ மற்றும் தாய்லாந்துடன் ஒப்பிடுகையில், மொபைல் போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி, இந்தியாவில் அதிகம். எனவே வரியை குறைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது.
மேலும், ஆப்பிள், ஷாவ்மி போன்ற நிறுவனங்கள் புதிய உற்பத்தி ஆலைகளை திறக்க உள்ளதால், அவற்றை ஊக்குவிக்கும் வகையிலும், அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், மொபைல் போன் ஏற்றுமதி 1.25 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.