ADDED : பிப் 18, 2024 11:53 PM

நகர்ப்புற இந்தியர்களில் பெரும்பாலானோர் ஆயுள் காப்பீடு பாலிசி பெற்றிருப்பதும், காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
'மேக்ஸ் லைப்' காப்பீடு நிறுவனம் இந்தியர்கள் மத்தியில் காப்பீடு தொடர்பான ஆய்வு நடத்தி, காப்பீடு பாது காப்பு விகித அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு, 25 நகரங்களில் உள்ள 4,700 பேருக்கு மேற்பட்டோரிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி, காப்பீடு பாதுகாப்பு அட்டவணை 45 ஆக உயர்ந்துள்ளது.
காப்பீடு விழிப்புணர்வு அட்டவணை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நகர்ப்புற இந்தியர்களில் நான்கில் மூன்று பேர் ஆயுள் காப்பீடு பாலிசி பெற்றுள்ளனர். பணிபுரியும் பெண்களில் பத்தில் எட்டு பேர் ஆயுள் காப்பீடு பெற்றுள்ளனர். பணியில் இருக்கும் பெண்கள் மத்தியில் காப்பீடு பாதுகாப்பும் அதிகரித்துள்ளது.
எனினும், இரண்டாம் அடுக்கு மற்றும் சிறிய நகரங்களில் காப்பீடு பெறுவது குறைவாக உள்ளது. இந்திய அளவில் தென் மாநிலம், காப்பீடு பாதுகாப்பில் முன்னிலை பெற்றுள்ளது. இளம் தலைமுறையினரிடையே காப்பீடு பாதுகாப்பு குறைவாக உள்ளது. இந்த பிரிவினர் தான் மிகக் குறைந்த பாதுகாப்பு கொண்டுள்ளனர்.

