அதிகரிக்கும் மகளிர் உதவித்தொகை மாநில நிதி நெருக்கடி கடுமையாகும் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் எச்சரிக்கை
அதிகரிக்கும் மகளிர் உதவித்தொகை மாநில நிதி நெருக்கடி கடுமையாகும் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் எச்சரிக்கை
ADDED : ஜன 26, 2025 12:59 AM

புதுடில்லி:மகளிரை மையப்படுத்தி நேரடி பண உதவி திட்டங்களை செயல்படுத்தும் பல மாநில அரசுகள், நிதிப் பற்றாக்குறையில் சிக்கி வருவதாக, பாரத ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களின் நிதிநிலைமை குறித்து எஸ்.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகளிரை மையப்படுத்தி பல மாநிலங்கள் சுனாமியாக வங்கிக் கணக்குகளில் நேரடி பண உதவி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்துகின்றன. சமீப ஆண்டுகளாக இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது.
அதிலும், தேர்தலை சந்திக்கும்போது, இதுபோன்ற உதவித் திட்டங்கள் அதிக அளவில் அறிவிக்கப்படுகின்றன.
ஆனால், அரசியல் காரணங்களுக்காக செயல்படுத்தப்பட வாய்ப்புள்ள இதுபோன்ற திட்டங்கள், மாநில அரசுகளை கடும் நிதி நெருக்கடியில் தள்ளக்கூடும். வெறும் எட்டு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற மகளிர் பண உதவித் திட்டத்தின் ஆண்டு மொத்த தொகை மட்டும் 1.50 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
இது அந்த மாநிலங்களின் மொத்த நிதி வருவாயில் 3 முதல் 11 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒடிசா போன்ற சில மாநிலங்களில் வரியல்லாத வருவாய் அதிகம் என்பதாலும் கடன் வாங்க வேண்டிய சூழல் இல்லாததாலும் இதுபோன்ற திட்டங்களின் செலவை தாங்கிக் கொள்ள இயலும்.மகளிர் பண உதவி திட்டங்கள் அதிகரித்து வருவதால், அது மத்திய அரசும் இதுபோன்ற கொள்கைகளை பின்பற்ற வேண்டிய அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம்.
பண உதவி திட்டங்களை, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வழியாகவும் தேர்தலில் ஆதரவை பெறவும் கையாளப்படும் நிலையில், இவற்றை செயல்படுத்துவதற்கு முன்பாக, மாநில நிதி நிலை மற்றும் கடன் வாங்கும் முறைகளை பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு எஸ்.பி.ஐ., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

