துருக்கி விமானங்களை பயன்படுத்த விமான நிறுவனங்களுக்கு அனுமதி இந்தியா மனமாற்றம்
துருக்கி விமானங்களை பயன்படுத்த விமான நிறுவனங்களுக்கு அனுமதி இந்தியா மனமாற்றம்
ADDED : ஆக 31, 2025 01:05 AM

புதுடில்லி:துருக்கி நாட்டைச் சேர்ந்த இரண்டு விமானங்களை மேலும் ஆறு மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் நிறுவனங் களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம், துருக்கியில் இருந்து குத்தகைக்கு எடுத்து, டில்லி - இஸ்தான்புல், மும்பை - இஸ்தான்புல் இடையே, போயிங் 777 ரக விமானங்களை 2023ம் ஆண்டு முதல் இயக்கி வந்தது.
பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது துருக்கி அரசு, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. இதனால், துருக்கியுடனான விமான போக்குவரத்து தொடர்புகளை துண்டிப்பதாக இந்தியா கடந்த மே மாதம் அறிவித்தது.
அப்போது, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளுமாறு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டிருந்தது.
ஒப்பந்தத்தை ரத்து செய்ய அரசு விதித்த கெடு நெருங்கிய நிலையில், இரண்டு துருக்கி விமானங்களின் குத்தகையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க, விமான போக்குவரத்து துறையிடம் இண்டிகோ அனுமதி கேட்டிருந்தது.
தங்கள் விமான சேவைகளை சிக்கலின்றி தொடர அனுமதிக்குமாறு இண்டிகோ கேட்டிருந்தது. இதற்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சில நிபந்தனைகளுடன் தற்போது அனுமதி அளித்துள்ளது.
துருக்கிக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை இது காட்டுவதாக தெரிகிறது. பயணிகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

