முதலீட்டு ஒப்பந்தம்: 10க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சு
முதலீட்டு ஒப்பந்தம்: 10க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சு
UPDATED : ஜூலை 07, 2025 10:08 AM
ADDED : ஜூலை 06, 2025 11:42 PM

புதுடில்லி:இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களுக்காக, 10க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: சவுதி, கத்தார், இஸ்ரேல், ஓமன், ஐரோப்பிய யூனியன், -சுவிட்சர்லாந்து, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளுடன், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
இந்நாடுகளை தவிர, தஜிகிஸ்தான், கம்போடியா, உருகுவே, மாலத்தீவுகள் மற்றும் குவைத் போன்ற நாடுகளுடனும் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இந்நாடுகளில் சிலவற்றுடன் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பட்ஜெட்டில் தற்போதைய முதலீட்டு ஒப்பந்தத்தை, மறுசீரமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இது முதலீட்டாளர்களுக்கு உகந்ததாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2024ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் உஸ்பெகிஸ்தானுடன் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.