ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஏற்றுமதி நாடானது இந்தியா பாதுகாப்பு துறை செயலர் பேச்சு
ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஏற்றுமதி நாடானது இந்தியா பாதுகாப்பு துறை செயலர் பேச்சு
ADDED : டிச 28, 2024 12:51 AM

கோவை:கோவையில், கொடிசியா சார்பில், 'பாதுகாப்பு, புதுமை, கண்டுபிடிப்பு' (சிடிக்) மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் ஆகியவை இணைந்து, பாதுகாப்பு துறை கருத்தரங்கு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், பாதுகாப்பு துறை செயலர் ராஜேஷ்குமார் சிங் பேசியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன், ராணுவத்திற்கு அதிக ஆயுதங்களையும், விமானங்களையும் இறக்குமதி செய்யும் நாடாக இருந்தோம். தற்போது, ஏற்றுமதியாளராக மாறியுள்ளோம்.
கடந்த நவம்பர் முடிய, உள்நாட்டு தேவைகளில், 48 சதவீத இலக்கை எட்டியுள்ளோம். உள்நாட்டு தயாரிப்புகளுக்கு, 12,000 கோடி ரூபாய் செலவிட நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.
உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை வடிவமைத்து, உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வகையில், 150 பொருட்கள், பல்வேறு துறைகளில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 5,012 பொருட்களை இந்தியாவில் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3,200 பொருட்கள் தயாராகின்றன.
கோவையில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று வருவது மகிழ்ச்சி. எதிர்காலத்தில் நன்றாக வளர்ச்சி பெறும் என நம்புகிறேன். இங்குள்ள ராணுவ மேம்பாட்டு மையத்திலிருந்து, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், புதிய கண்டு பிடிப்புகளுக்கான அங்கீகார விருதுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு துறைக்கு பொருட்களை வழங்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு பரிமாறப்பட்டன. முன்னதாக, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். மையத்தின் செயல்பாடுகள் குறித்து, 'சிடிக்' செயல் இயக்குனர் சுந்தரம் விளக்கினார்.

