'இந்தியா - ரஷ்யா வர்த்தகம் ரூ.8.90 லட்சம் கோடியை எட்டும்'
'இந்தியா - ரஷ்யா வர்த்தகம் ரூ.8.90 லட்சம் கோடியை எட்டும்'
ADDED : டிச 06, 2025 02:09 AM

புதுடில்லி: 'வரும் 2030ம் ஆண்டுக்கு முன்னதாகவே, இந்தியா - ரஷ்யா இடையேயான ஆண்டு வர்த்தகம், 8.90 லட்சம் கோடியை எட்டும்' என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டில்லியில் 23வது இந்தியா -- ரஷ்யா உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி முன்னிலையில், இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது, முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இருதரப்பு முடிவுகள் குறித்து நிருபர்களிடம் இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
மருத்துவம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, ஏ.ஐ., விமான தயாரிப்பு, உயர் தொழில்நுட்பம், ராணுவ தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டதாக கூறினர்.
ஒத்துழைப்பு தொடரும் பிரதமர் மோடி கூறியதாவது:
இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பை புதிய உயரத்துக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியா - ரஷ்யா இடையே பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்களை, வரும் 2030ம் ஆண்டு வரை விரைவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளோம்.
கடந்த ஆண்டு புடினும், நானும், இந்தியா -- ரஷ்யா இடையே ஆண்டு வர்த்தகம் 100 பில்லியன் டாலரை 2030க்குள் எட்ட இலக்கு நிர்ணயித்தோம். ஆனால், தற்போது ஒத்துழைப்பு மேம்பட்டு வருவதால், திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே இலக்கை எட்டுவோம் என நம்பிக்கை உள்ளது.
தடையின்றி எரிபொருள் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்ததாவது:
இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம். ஆண்டு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக அதிகரிக்க, இலக்குடன் செயல்படுகிறோம்.
இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனையை, அமெரிக்க டாலரை தவிர்த்து, இந்திய ரூபாயையும், ரஷ்ய ரூபிளையும் பயன்படுத்துவதை நோக்கி படிப்படியாக நகர்ந்து வருகிறோம்.
இந்தியாவுக்கு தடையில்லா எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா தயாராக உள்ளது. அணுசக்தி மற்றும் தளவாட போக்குவரத்து வழித்தடங்களிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உள்ளோம்.

