'பிரிட்டன் கார்பன் வரி விதித்தால் இந்தியா தகுந்த பதிலடி தரும்'
'பிரிட்டன் கார்பன் வரி விதித்தால் இந்தியா தகுந்த பதிலடி தரும்'
ADDED : ஜூலை 26, 2025 11:54 PM

புதுடில்லி:பிரிட்டன் கார்பன் வரி விதிக்கும்பட்சத்தில், இந்தியா தகுந்த பதிலளிக்கும் என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வரும் 2027 ஜனவரி முதல், பிரிட்டனில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அவற்றின் கார்பன் உமிழ்வைக் கணக்கிட்டு, வரி விதிக்கப்படும் என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் கார்பன் வரி விதித்தால், இந்தியாவின் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது.
இதுவரை இப்பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு பின் பூஜ்ஜியமாக குறைந்து உள்ளது.
இந்நிலையில், பிரிட்டனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியா கார்பன் வரி விலக்கு பெறாதது தொடர்பாக, மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அமைச்சர் தெரிவித்ததாவது:
பிரிட்டன் கார்பன் வரி விதிக்கும்பட்சத்தில், இந்தியா தகுந்த முறையில் பதிலளிக்கும். இந்தியா பலம் குறைந்த நாடு கிடையாது. எந்த ஒரு நாடாவது வர்த்தகத்தில் வரி அல்லாத, வேறு தடை ஏற்படுத்தினால், அதற்கு தகுந்த பதில் தரப்படும்.
அடுத்தாண்டு முதல் கார்பன் வரி விதிக்க உள்ளதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக இந்திய நிறுவனங்களைக் காட்டிலும், அங்குள்ள நிறுவனங்களே அதிகம் கவலை தெரிவித்து உள்ளன.
ஏனென்றால், இதனால் அங்கு இயங்கும் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செலவு கணிசமாக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.