தங்கத்தை முதலீடாக கருதி வாங்கி குவித்த இந்தியர்கள்
தங்கத்தை முதலீடாக கருதி வாங்கி குவித்த இந்தியர்கள்
ADDED : நவ 01, 2025 02:45 AM

புதுடில்லி: கடந்த செப்டம்பர் காலாண்டில், 88,000 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள், நாணயங்களை இந்திய முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தங்கம் விலை உயர்வு தொடரும் என்ற எதிர்பார்ப்பில், கூடுதல் லாபம் தரும் முதலீடாக கருதி, இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்கம் வாங்குவதில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவில் முதலீட்டு தேவை, கடந்த செப்டம்பரில் உயர்ந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில், அது 20 சதவீதம் அதிகரித்து, 91.6 டன் அல்லது மதிப்பின் அடிப்படையில், 67 சதவீதம் உயர்ந்து, 10.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.
அதே சமயம், வரலாறு காணாத விலை உயர்வு காரணமாக, ஒட்டுமொத்த தங்கம் கொள்முதல் 16 சதவீதம் சரிந்து, 209.40 டன்னாகவும், நகை ஆபரணங்களுக்கான தேவை, 31 சதவீதம் சரிந்து, 117.70 டன்னாக பதிவாகி உள்ளது.
நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில், இதுவரை காணாத அளவுக்கு மொத்த தங்கம் வாங்கியதில், முதலீட்டு தேவைக்கான கொள்முதல் 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது. தங்கம் அடிப்படையிலான இ.டி.எப்., திட்டங்களும் கணிசமான உயர்வை கண்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், யு.ஏ.இ.,யில் இருந்து நடப்பு நிதியாண்டில் 200 டன் தங்கம் வரை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

