UPDATED : நவ 01, 2025 02:06 PM
ADDED : நவ 01, 2025 02:41 AM

இந்தியாவில், 'லாஜிஸ்டிக்ஸ்' எனப்படும் தயாரிப்பில் இருந்து நுகர்வோர் வரை பொருட்களை கொண்டு சேர்க்கும் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அதேசமயம், மிகப்பெரிய நிறுவனங்கள் களத்தை ஒன்றாக கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளதால், போட்டி குறைவதற்கான கவலைகளும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, பிளாக்ஸ்டோன் போன்ற உலகளாவிய முதலீட்டு பெருநிறுவனங்கள் நாடு முழுதும் கையாளும் சரக்கு கையிருப்பு பூங்காக்கள் அதிகரித்து வருவது, ஏகபோகத்தை நினைவூட்டுகிறது. வளர்ச்சியின் துாண் நம் நாட்டின் நவீன கிடங்கு பரப்பளவு, 2023 - 24ல் 53 கோடி சதுர அடி என மதிப்பிடப்பட்டது. 2020ல், 19 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இருந்த இந்த துறை, நாட்டின் ஜி.டி.பி.,யைவிட 1.20 மடங்கு வேகத்தில் வளர்கிறது.
எனினும், நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக உள்ளது. இது, உலக சராசரியான 11 சதவீதத்தை விட அதிகம். சாலை போக்குவரத்தில் தான் அதிக நம்பிக்கை இருந்தாலும், அதன் ஒழுங்கற்ற அமைப்பை சரி செய்வதில் கிடைத்த வாய்ப்பு, இதற்கான முக்கிய காரணம். ஆனால், தேசிய லாஜிஸ்டிக்ஸ் கொள்கை யுலிப் டிஜிட்டல் தளம் மற்றும் சிறுதொழில்களுக்கான ஆதரவுகள் வாயிலாக மாற்றம் மிக வேகமாக நடைபெறுகிறது.
பிரத்யேக சரக்கு வழித்தட ரயில் தடங்கள், சரக்கு ரயில் வேகத்தை இருமடங்கு உயர்த்தி, என்.சி.ஆர்., எனப்படும் டில்லி சுற்றுவட்டார பகுதிகளை உலகத் தரத்திலான கிடங்கு மையங்களாக மாற்றி வருகின்றன. பாரத்மாலா மற்றும் கதிசக்தி போன்ற திட்டங்களில், மல்டி-மோடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, போக்குவரத்து நேரம் 66 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக்க அலை கடந்த 2021 முதல் பிளாக்ஸ்டோன் ஹாரிசான் இண்டஸ்டிரியல் பார்க்ஸ் என்ற தளத்தின் வாயிலாக, மூன்று ஆண்டில் 5.50 கோடி சதுரடி கிடங்கு வசதிகளை 10 நகரங்களில் பெற்றுள்ளது. எம்பசி இண்டஸ்டிரியல் பார்க்ஸ், ஆல்கார்கோ லாஜிஸ்டிக், லோகோஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள், பிளாக்ஸ்டோனால் வாங்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, என்.சி.ஆரில் பரூக் நகர், காசியாபாத் போன்ற முக்கிய இடங்களில் இந்நிறுவனம் கோடிக்கணக்கான சதுரடி பரப்புகளை கையகப்படுத்தியுள்ளது.
இது, சந்தை ஒருங்கிணைப்பை வேகப்படுத்தி, சில நிறுவனங்கள் தவிர்க்க முடியாத வணிக கூட்டாளிகளாக உருவாகும் நிலையை உருவாக்கியுள்ளது. கட்டுப்பாடு கூடலாம் இந்திய போட்டி ஆணையம், பல பெரிய ஒப்பந்தங்க ளை அனுமதித்திருந்தாலும், அதிக சந்தை கட்டுப்பாடு, வாடகை உயர்வு, சிறு நிறுவனங்கள் அணுக மறுத்தல் போன்ற அபாயங்கள் இதில் உள்ளன.
மறைமுக ஆபத்து ஒரே சில நிறுவனங்கள் லாஜிஸ்டிக்ஸ் சொத்துக்களை கட்டுப்படுத்தினால், புதியவர்களுக்கு சந்தை நுழைவு சிரமமாகும். வாடகை உயர்வு, சிறுதொழில்கள் பாதிப்பு, கண்டுபிடிப்பு திறன் குறைவு என நெடுங்கால பாதிப்புகள் உருவாகலாம். நம் நாடு 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாகும் பொருளாதார கனவை உணர, வளர்ச்சி மட்டுமே நோக்கமின்றி, அதனுடன் சேர்த்து நியாயமான போட்டியையும் உறுதிப்படுத்தும் கொள்கைகள் அவசியம்.

