பிரிட்டனுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிக்கிறது வர்த்தக போட்டி
பிரிட்டனுக்கு ஆடை ஏற்றுமதி அதிகரிக்கிறது வர்த்தக போட்டி
ADDED : நவ 01, 2025 02:40 AM

திருப்பூர்: வங்கதேசம், வியட்நாம், கம்போடியா நாடுகளின் போட்டி அதிகரிப்பால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி, பிரிட்டனுக்கு ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய ஏற்றுமதியாளர்கள் தயாராக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இந்தியா - பிரிட்டன் இடையேயான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், சீரான நிலையில் இருந்து வந்தது. டையற்ற வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, பிரிட்டன் இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு, 5 முதல் 6 சதவீதமானது. இது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள், இரட்டை இலக்கத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், பிரிட்டனுக்கு ஏப்., முதல் ஆக., வரை, 5,168 கோடி ரூபாய்க்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 4,980 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்தது. 2023 - 24 நிதியாண்டில் இது 4,687 கோடி ரூபாயாக இருந்தது.
சீனாவும், வங்கதேசமும், பிரிட்டனின் 40 சதவீத சந்தையை வைத்துள்ளன. வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்த வியட்நாமின் ஏற்றுமதியும், இந்தாண்டு, 3.50 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது; கம்போடியா, 4.30 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதுகுறித்து இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
வங்கதேசம், வியட்நாம், கம்போடியாவின் போட்டியை சமாளிக்க திருப்பூர் தயாராக வேண்டும். போட்டித்திறனை வளர்த்து, நவீன ஆடை உற்பத்தி, செயற்கை நுாலிழை கலப்பு ஆடை உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சீனாவை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், பிரிட்டனில் மட்டும், 20,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்து, புதிய போட்டியாக உருவெடுத்துள்ளன.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நீடித்த நிலையான வளர்ச்சி நிலை சாதனைகளை எடுத்துரைத்து, அதன் வாயிலாக கூடுதல் ஆர்டர்களை கவர முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டனுக்கு ஆடை ஏற்றுமதி: மாதம் மதிப்பு (ரூ. கோடியில்): ஏப்ரல் 1: மே 1: ஜூன் 997: ஜூலை 1: ஆக.:

