ADDED : செப் 29, 2025 11:22 PM

புதுடில்லி : கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தொழில் உற்பத்தி நான்கு சதவீத வளர்ச்சி கண்டதாக மத்திய அரசின் தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொழில் உற்பத்தி குறியீடான ஐ.ஐ.பி., குறித்து வெளியிடப்பட்ட தகவல் வருமாறு:
கடந்த 2024 ஆக., மாதத்துடன் ஒப்பிடும் போது, கடந்த மாதத்தில் தொழில் உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக இருந்தது. 6 சதவீத வளர்ச்சி கண்ட சுரங்க துறை இதற்கு முக்கிய காரணமானது.
குறியீட்டில் நான்கில் மூன்று பங்கு வகிக்கும் தயாரிப்பு துறை, 2024 ஆகஸ்டில் 1.20 சதவீத வளர்ச்சி கண்ட நிலையில், சென்ற மாதத்தில் 3.80 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
கட்டமைப்பு, கட்டுமானத் துறை 10.60 சதவீத வளர்ச்சி கண்டது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டில் 2.70 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் பொருட்கள் துறை வளர்ச்சி, 2024 ஆக., மாதத்தில் 5.40 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 3.50 சதவீதமாக குறைந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.