செல்வந்தர்களிடம் இருந்து கற்க வேண்டிய முதலீட்டு பாடங்கள்
செல்வந்தர்களிடம் இருந்து கற்க வேண்டிய முதலீட்டு பாடங்கள்
ADDED : ஆக 17, 2025 06:35 PM

அதி செல்வந்தர்களாக கருதப்படும் அதிக நிகர மதிப்பு கொண்ட செல்வந்தர்கள் பற்றி குறிப்பிடும் போது, தனி விமானம், சொகுசு கார்கள் போன்றவை நினைவுக்கு வரலாம். இவை எல்லாம் செல்வ செழிப்பின் அடையாளம் என்றாலும், பணம் தொடர்பாக அவர்கள் சிந்திக்கும் விதமே முக்கியமாக அமைகிறது. அவர்களின் செல்வ செழிப்பிற்கும் அதுவே அடிப்படையாக அமைகிறது.
செல்வத்தை உருவாக்குவதற்கான வழிகளை நாடுவதிலும் இந்த மனநிலையின் தாக்கத்தை காணலாம். அந்த வகையில் செல்வந்தர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய முதலீடு பாடங்களை பார்க்கலாம்.
செல்வ மனநிலை:
செல்வ செழிப்பு என்பது திடீரென வருவதில்லை. அதை உருவாக்கி கொள்ள வேண்டும். பெரும்பாலான முதல் தலைமுறை செல்வந்தர்கள், விடாமுயற்சி, இடர்களை எதிர்கொள்வது மற்றும் மறுமுதலீடு மூலமே செல்வம் சேர்த்துள்ளனர். இதற்கு அடிப்படையாக அமைவது வளர்ச்சி மனநிலை. முதலீட்டிலும் இது வழிகாட்டுகிறது.
கூட்டு வட்டி:
மறு முதலீடு மூலம் சாத்தியமாகும் கூட்டு வட்டியின் அருமையை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இதை அவர்கள் முதன்மையாக நம்புகின்றனர். பணத்தை விலக்கி கொள்ளும் துாண்டுதலை தவிர்த்து, முதலீடு வளர்வதற்கான கால அவகாசத்தை அளிக்க தயாராக இருக்கின்றனர். எனவே சமபங்குகளை அதிகம் விரும்புகின்றனர்.
ஏற்ற இறக்கம்:
செல்வந்தர்கள், சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி அறிந்து இருக்கின்றனர். எனவே அவர்கள் இடர்களை எதிர்கொள்ளும் துணிவு கொண்டிருந்தாலும் கண்மூடித்தனமாக செயல்படுவதில்லை. பாதிப்புகள், பின்விளைவுகள், சந்தை போக்கு போன்றவற்றை கணக்கில் கொண்ட பிறகே தெளிவாக முடிவெடுக்கின்றனர்.
எதிர்கால சிந்தனை:
செல்வந்தர்கள் தொலைநோக்கான சிந்தனை கொண்டுள்ளனர். முதலீடு முடிவுகளை மேற்கொள்ளும் போது, அடுத்த சில ஆண்டுகள் பற்றி மட்டும் யோசிக்காமல், அடுத்து வரும் பல பத்தாண்டுகள் பற்றி யோசிக்கின்றனர். அடுத்த தலைமுறையையும் மனதில் கொண்டு முதலீடு முடிவுகளை மேற்கொள்கின்றனர்.
கை மேல் பலன்:
நீண்ட கால அணுகுமுறை கொண்டிருந்தாலும், முதலீடுகள் நல்ல பலன் தர வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துகின்றனர். எதிர்பார்த்த பலனை தரவில்லை எனில் முதலீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சரியான ஆய்வு மற்றும் கண்காணிப்பு அணுகுமுறையை கொண்டுள்ளனர்.