டிரம்ப் தட்டிவிட்ட மெசேஜ் வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்
டிரம்ப் தட்டிவிட்ட மெசேஜ் வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்
ADDED : ஏப் 11, 2025 12:15 AM

வாஷிங்டன்:அமெரிக்க நேரப்படி நேற்று காலை 9:37 மணிக்கு அதிபர் டிரம்ப், தன் 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில், 'இதுவே வாங்குவதற்கு மிகச்சிறந்த நேரம்' என பதிவிட்டார்.
அடுத்த நான்கு மணி நேரத்தில், சீனா தவிர்த்து, பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு விதித்த பரஸ்பர வரி விதிப்பை, 90 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், சீனாவுக்கான வரி விதிப்பை 125 சதவீதமாக அதிகரித்தும் உத்தரவிட்டார்.
டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று 10 சதவீதம் உயர்வுடன் நிறைவடைந்தன.
வர்த்தகப் போர் பதற்றத்தால், முந்தைய நான்கு வர்த்தக நாட்களில் இழந்த தொகையில், 70 சதவீதத்தை முதலீட்டாளர்கள் மீண்டும் பெற்றனர். இதன் மதிப்பு 4 லட்சம் கோடி டாலர் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க சந்தையை தொடர்ந்து, ஐரோப்பிய பங்கு சந்தையின் ஸ்டோக் 600 குறியீடு 7 சதவீதமும்; ஜப்பானின் நிக்கி 8 சதவீதமும்; தென்கொரியாவின் கோஸ்பி குறியீடு 5 சதவீதமும்; ஆஸ்திரேலியாவின் ஏ.எஸ்.எக்ஸ்., 200 குறியீடு 5 சதவீதமும் உயர்வு கண்டன.
நேற்று மகாவீர் ஜெயந்தியை ஒட்டி, இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை என்பதால், அதன் தாக்கம் இன்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
இதனிடையே, டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு தற்காலிக நிறுத்தம் தொடர்பாக தன் சமூக வலைதளத்தில் முன்கூட்டியே பதிவிட்டதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
இதுகுறித்து, வெள்ளை மாளிகை முன்னாள் வழக்கறிஞரும், விமர்சகருமான ரிச்சர்டு பெயின்டர் தெரிவித்ததாவது:
சந்தைகளை கட்டுப்படுத்துவதை டிரம்ப் விரும்புகிறார். ஆனால், மிகவும் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்.
பங்கு சந்தை சட்டம், நிறுவனங்களின் உள்விவகாரம் தொடர்பாக, பிறருக்கு தகவல்களை அளித்து உதவுவதை தடை செய்துள்ளது.
டிரம்பின் பதிவை பார்த்து, பங்குகளை வாங்கியவர்கள் அதிகளவில் பணத்தைக் குவித்து இருப்பர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.