இந்தியாவில் ஐபோன் தயாரிப்புக்கு சிக்கல் பாக்ஸ்கானிலிருந்து வெளியேறும் சீனர்கள் பின்னணியில் சீன அரசின் அழுத்தமா?
இந்தியாவில் ஐபோன் தயாரிப்புக்கு சிக்கல் பாக்ஸ்கானிலிருந்து வெளியேறும் சீனர்கள் பின்னணியில் சீன அரசின் அழுத்தமா?
ADDED : ஜூலை 03, 2025 10:56 PM

சென்னை:சென்னை பாக்ஸ்கான் ஆலையில் இருந்து சீனாவை சேர்ந்த 300 பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்களை அந்நிறுவனம் திரும்ப அழைத்திருப்பது, இந்தியாவின் ஆப்பிள் ஐபோன் தயாரிப்பை பாதிக்குமா என்ற கேள்வியை எழுப்பிஉள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வருகிறது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படும் ஐபோன்கள், உலகம் முழுதும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, சீன பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் நாடு திரும்பி வருகின்றனர். ஐபோன் 17 மாடல் தயாரிப்பை இந்தியாவில் துவங்க ஆப்பிள் நிறுவனம் ஆயத்தமாகி வரும் நிலையில், அசெம்பிளி பணியில் திறமையான பணியாளர்கள் வெளியேறுவதால், புதிய மாடல் போன் தயாரிப்பில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
திறமையான சீனர்கள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடம்பெயர்வதை கட்டுப்படுத்த, உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கு சீன அரசு உயரதிகாரிகள் அழுத்தம் தருவதே இந்நிலைக்கு காரணம் எனத் தெரிகிறது.
அண்மைக் காலமாகவே, இந்தியாவுக்கு சீனா பல வழிகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவுக்கு அரிய காந்தங்கள், கனிமங்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்த சீனா, பயிர்களுக்கான சிறப்பு உரங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் ஏற்றுமதியையும் தடுத்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்தை கைவிட அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைகள் ஒருபுறம் என்றால், பொறியாளர்களை திரும்ப அழைக்கும் சீனாவின் நடவடிக்கை மறுபுறமென, இந்திய வளர்ச்சிக்கு இருபெரும் நாடுகள் நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றன.