இஸ்ரேல் - ஈரான் மோதலால் இந்திய ஏற்றுமதிக்கு சிக்கல்
இஸ்ரேல் - ஈரான் மோதலால் இந்திய ஏற்றுமதிக்கு சிக்கல்
ADDED : ஜூன் 16, 2025 12:37 AM

புதுடில்லி:இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றத்தைத் தொடர்ந்து, இந்திய ஏற்றுமதிக்கான சரக்கு போக்குவரத்து செலவு 20 சதவீதம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பில் பறக்க அந்நாடு தடை விதித்துள்ள நிலையில், தற்போது ஈரானின் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து செலவு மேலும் அதிகரிக்கக்கூடும்.
மற்றொரு புறம் கச்சா எண்ணெயின் விலை 8 சதவீதம் அதிகரித்துள்ளதால், கப்பல் போக்குவரத்து செலவும் அதிகரிக்கும். வழக்கமாகவே, சரக்கு கப்பல் போக்குவரத்தைக் காட்டிலும், சரக்கு விமான போக்குவரத்துக்கு 8 சதவீதம் கூடுதல் செலவாகும்.
பல மாதங்களுக்குப் பிறகு, கடந்த சில வாரங்களுக்கு முன்தான் செங்கடல் வழியாக இந்தியா சரக்கு போக்குவரத்தை மீண்டும் துவங்கியது. இந்நிலையில், தற்போதைய சூழலால், செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியில் கப்பல் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதியில் 80 சதவீதமும்; அமெரிக்காவுக்கான பெரும்பான்மையான ஏற்றுமதியும் செங்கடல் வாயிலாகவே அனுப்பப்படுகிறது.
பாதிப்பு
மருந்து, மொபைல், ஆபரண ஏற்றுமதி பாதிக்கப்படும்
பாகிஸ்தான், ஈரான் வான்பரப்பு மூடலால் விமான போக்குவரத்து செலவு அதிகரிக்கும்
இஸ்ரேலிலிருந்து வைர இறக்குமதி பாதிக்கப்படும்
செங்கடல், சூயஸ் கால்வாய் வழி சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும்