இந்திய - சீன எல்லையில் பதற்றம் தணிப்பு வர்த்தக உறவு மேம்படும் என கணிப்பு
இந்திய - சீன எல்லையில் பதற்றம் தணிப்பு வர்த்தக உறவு மேம்படும் என கணிப்பு
ADDED : அக் 23, 2024 10:33 PM

புதுடில்லி:லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில், ராணுவத்தினர் ரோந்து செல்வது குறித்து இந்தியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், இருநாட்டு வர்த்தக உறவு மேம்பட உதவும் என, ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து, வீரர்களின் ரோந்து நடவடிக்கையை விலக்கிக் கொள்வதில், சீனாவுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இந்தியா, கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.
இது, கடந்த நான்கு ஆண்டுகளாக இருநாடுகள் இடையே எல்லையில் நிலவிய பதற்றத்தை தணிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதகமான அம்சத்தால், இந்தியா - சீனா இடையே வர்த்தக உறவு மேம்படும் என்றும், பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க உதவும் என்றும் ஏற்றுமதியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
எனினும், வர்த்தக உறவு எந்தளவு மேம்படும் என்பதை உடனடியாக கணிக்க இயலாது என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் இயக்குனர் அஜய் சஹாய் தெரிவித்துள்ளார்.

