'தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை இனி டிட்கோ மட்டுமே அமைக்கும்'
'தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை இனி டிட்கோ மட்டுமே அமைக்கும்'
ADDED : செப் 03, 2026 06:40 AM

சென்னை: தமிழகத்தில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை தொழில் துறையின் கீழ் செயல்படும், 'டிட்கோ' நிறுவனம் மட்டுமே செயல்படுத்த உள்ளது. அந்த பணிகளில், 'எல்காட்' ஈடுபட தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடுகளை ஈர்க்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமும், 'எல்காட்' எனப்படும் தமிழக மின்னணு நிறுவனமும் இணைந்து, 2000ம் ஆண்டில், சென்னை தரமணியில், டைடல் பார்க் கட்டடத்தை அமைத்தன.
அங்கு, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன.இதையடுத்து, சென்னையில் பல்வேறு ஐ.டி., நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. டிட்கோ நிறுவனம் தொழில் துறையின் கீழும், எல்காட் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழும் செயல்படுகின்றன. டிட்கோ, டைடல் பார்க் நிறுவனம் வாயிலாக மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் மினி டைடல் பார்க் அமைத்து வருகிறது.
இதுதவிர, சென்னை சோழிங்கநல்லுார், கோவை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி ஓசூர், மதுரையில் எட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை, 'எல்காட்' நிறுவனம் அமைத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப கோபுரங்களையும் அமைக்கிறது. இனி, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை டிட்கோ வாயிலாக மட்டுமே செயல்படுத்துமாறு அரசு தெரிவித்துள்ளது.
