உலகளவில் 4வது இடத்திற்கு சரிந்தது ஜப்பானின் பொருளாதாரம்
உலகளவில் 4வது இடத்திற்கு சரிந்தது ஜப்பானின் பொருளாதாரம்
ADDED : பிப் 15, 2024 11:11 PM

டோக்கியோ:ஜப்பான் பொருளாதாரம் கடந்த காலாண்டில் சரிந்ததை அடுத்து, அது தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக பின்னடைவை சந்தித்து உள்ளது.
ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், கடந்த டிசம்பர் காலாண்டில், பணவீக்கத்துக்கு சரிசெய்யப்பட்ட அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.4 சதவீதம் சரிந்தது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டிலும், 2.9 சதவீதம் சரிவை கண்டது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக சரிவை காணும் போது, அது பொருளாதார மந்தநிலையாக கருதப்படுகிறது.
கடந்த 2010ம் ஆண்டு வரை, ஜப்பான் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. ஆனால் தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக பின்னடைவை சந்தித்து உள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தப்படியாக ஜெர்மனி, தற்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறி உள்ளது. அதன்படி, ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டு, கிட்டத்தட்ட 373 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவே ஜப்பானுக்கு கிட்டத்தட்ட 348 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஜப்பான் 'யென்' பலவீனமாக இருந்ததே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அத்துடன் ஜப்பானின் மக்கள் தொகை சரிவு, பின்தங்கிய உற்பத்தி திறன் உள்ளிட்டவையும் காரணமாக கூறப்படுகிறது.