ADDED : டிச 12, 2025 01:37 AM

மும்பை: கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவில் புதிய கிளையை துவங்க, அமெரிக்காவின் ஜே.பி.மோர்கன் சேஸ் அண்டு கோ, ரிசர்வ் வங்கியின் முதல்கட்ட ஒப்புதலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு, சொத்து மேலாண்மை முதல் முதலீட்டு வங்கி வரை, பல்வேறு சேவைகளை வழங்கி வரும் உலகளாவிய நிதி நிறுவனமான இது, சொத்து மதிப்பு அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கி. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளை கொண்டுள்ள இந்த வங்கி, இந்தியாவில் நிறுவனங்களுக்கு மட்டும் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே டில்லி, பெங்களூரு, மும்பை நகரங்களில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான மூன்று கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது புனேவில் புதிய கிளையை துவங்க, ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற்றுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் கடைசியாக கடந்த 2016ல் புதிய கிளையை துவங்கி இருந்தது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவில், தன் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு, பரிவர்த்தனை முதல் கடன் வினியோகம் வரை, வங்கி சேவைகளை அளிப்பதற்கு புதிய கிளையை துவங்க உள்ளது.

