மொபைல் நெட்வொர்க்கை மாற்றுவது போல எல்.பி.ஜி., இணைப்பை மாற்றும் வசதியும் வருகிறது
மொபைல் நெட்வொர்க்கை மாற்றுவது போல எல்.பி.ஜி., இணைப்பை மாற்றும் வசதியும் வருகிறது
ADDED : செப் 28, 2025 11:12 PM

புதுடில்லி:தொலைபேசி சேவைக்காக விருப்பப்பட்ட நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும் 'மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி' வசதியை போல, எல்.பி.ஜி., காஸ் இணைப்பை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றி கொள்ளும் வசதி நாடு முழுதும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2013 அக்டோபரில், சோதனை முறையில், எல்.பி.ஜி., இணைப்பு களை மாற்றிக் கொள்ளும் வசதி 13 மாநிலங்களில் உள்ள 24 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2014, ஜனவரியில், நாடு முழுதும் 480 மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.
புதிய வசதி இதில், 'இண்டேன் காஸ்' வாடிக்கையாளர் ஒருவர், அதே நிறுவனத்தின் வேறு வினியோகஸ்தருக்கு வேண்டுமானால் இணைப்பை மாற்றலாம். பாரத் காஸ் அல்லது எச்.பி.,காஸ் இணைப்பிற்கு மாற்ற முடியாது.
தற்போது, நுகர்வோர் ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்ளும், போர்ட் டபிலிட்டி வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உ ள்ளதாவது:
உள்ளூர் வினியோகஸ்தர் சரிவர செயல்படாத போது, நுகர்வோருக்கு மாற்று வழிகள் இல்லாததால், சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும், காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதிரியாக இருக்கும் சூழலில், நுகர்வோருக்கு எல்.பி.ஜி., நிறுவனம் அல்லது வினியோகஸ்தரை சுதந்திரமாக தேர்வு செய்யும் வாய்ப்பு அவசியமாகிறது. இது தொடர்பாக வினியோகஸ்தர்கள், நுகர்வோர் கருத்துகளை தெரிவிக்கலாம்.
கடந்த நிதியாண்டில், எல்.பி.ஜி., வீட்டு இணைப்பு களின் எண்ணிக்கை 32 கோடியை தாண்டி உள்ளது. எனினும், நுகர்வோரின் குறைகள் ஆண்டுக்கு 17 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் வினியோக குளறுபடி, மீண்டும் நிரப்பப்பட்ட காஸ் வினியோகிப்பதில் தாமதம் ஆகியவை இருப்பதாக, சமீபத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சேவை குறைபாடுகளால், குறிப்பாக உள்ளூர் வினியோகஸ்தர் தண்டனையை எதிர்கொள்ளும் போது, வீடுகள் மற்றும் வணிக ரீதியான நிறுவனங்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இது போன்ற சூழல்கள், புதிய வசதியின் தேவையை உணர்த்துகின்றன.
வழிகாட்டுதல் சேவை குறைபாடுகளில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கவும், அத்தியாவசிய எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், இத்திட்டம் அவசியமாகிறது.
இது தொடர்பாக அக்டோபர் 15 வரை கருத்துக்களை தெரிவிக்கலாம். கருத்துகள் அடிப்படையில், எல்.பி.ஜி., போர்ட்டபிலிட்டிக்கான விதிகள், வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு, நாடு முழுதும் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு நிறுவனத்தில் அதன் வினியோகஸ்தரை மட்டுமே மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. இனி நிறுவனத்தையே மாற்றிக் கொள்ளலாம்