என்ன செய்தும் 'கிளிக்' ஆகாத 'கோடக்' கழுத்தை நெரிக்கும் கடன் நெருக்கடியில் தவிப்பு
என்ன செய்தும் 'கிளிக்' ஆகாத 'கோடக்' கழுத்தை நெரிக்கும் கடன் நெருக்கடியில் தவிப்பு
UPDATED : ஆக 18, 2025 10:40 AM
ADDED : ஆக 17, 2025 10:21 PM

கிளிக்...
இந்த சத்தத்தை அமெரிக்காவில் துவக்கி, உலகளவில் ஒலிக்கச் செய்த ஒரு நிறுவனம் கோடக். கிட்டத்தட்ட 133 ஆண்டுகள், ஏராளமான மக்களுக்கு அவர்களின் தருணங்களை தனது கேமராக்களால் படம் பிடித்து வண்ணமயமாக்கிக் கொண்டிருந்த இந்நிறுவனம், தற்போது திவால்நிலை என்ற கருப்பு வெள்ளை காட்சிக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வருகின்றன.
தன்னுடைய வணிகத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக, இந்நிறுவனம் தன்னுடைய காலாண்டு நிதி நிலை முடிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு வருவாய் அறிக்கையுடன் வெளியிடப்பட்ட பதிவில், கோடக்கின் நிர்வாகம், அடுத்த ஆண்டு தொடர்ந்து செயல்படும் திறன் குறித்து, தன்னுடைய ஆழமான கவலைகளை எழுப்பி உள்ளது.
அடுத்த 12 மாதங்களில் முதிர்வடையும் 500 மில்லியன் டாலர், அதாவது, 4,350 கோடி ரூபாய் கடனை அடைக்க, உறுதியான நிதி இல்லை. புதிய நிதி திரட்டல் இல்லாமல், நிறுவனம் தனது நிலையை இழக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இது வெளியானதும் கோடக் பங்கு விலை, கடந்த புதன்கிழமை காலை நிலவரப்படி 21 சதவீதம் சரிந்தது.
நிதிநிலை அழுத்தங்கள் மொத்த லாபம், முந்தைய காலாண்டைவிட 12 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில், சரிவு கண்ட விற்பனையும், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவும், கோடக் நிறுவனத்தின் நிதிநிலையில் கடுமையான அழுத்தம் தந்துகொண்டிருக்கின்றன. கூடவே, ரொக்க இருப்பும் குறைந்து வருகிறது.
தலைமை நிதி அதிகாரி டேவிட் புல்விங்கிள் வெளியிட்ட குறிப்பில், நிறுவனம் ஓரளவு சீரற்ற நிதிநிலையை எதிர்கொள்வதாகவும்; ஊழியர்களின் ஓய்வூதிய வருமான திட்டத்தை நிறுத்துதல் மற்றும் கடனை அடைக்க அதிகப்படியான சொத்துக்களை விற்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் கூறினார்.
கோடக்கின் வீழ்ச்சி கடந்த 19ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில், ஜார்ஜ் ஈஸ்ட்மேன் என்பவரால் நிறுவப்பட்ட கோடக், புகைப்படத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவு, மலிவு விலையில் மக்களுக்கு கேமராக்கள் கிடைத்தன.
'நீங்கள் பொத்தானை மட்டும் அழுத்துங்கள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்ற முழக்கம், 1970களில் உச்சம் தொட்டு, மக்களைக் கவர்ந்தது. ஒரு கட்டத்தில், இந்நிறுவனம் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 90 சதவீத திரைப்பட பிலிம் விற்பனையையும் 85 சதவீத கேமரா சந்தையையும் தன்னுடைய கட்டுக்குள் வைத்திருந்தது.
பின்னர் எழுந்த டிஜிட்டல் புரட்சி, தொழில்துறையை உயர்த்தியதும், கோடக் தடுமாறத் துவங்கியது. இந்நிறுவனத்துடன் முரண்பட்ட ஒரு பொறியாளர்தான், முதல் டிஜிட்டல் கேமராவை உருவாக்கினார்.
ஆனால், அவரது புதுமை தங்களுடைய தற்போதைய தயாரிப்புகளை வீழ்த்திவிடுமோ என்று பயந்து, வணிகத்தை காப்பாற்ற வேறு மாற்று வழிகளில் இறங்கியது. ஆனால், டிஜிட்டல் கேமராக்கள் மேலும் பல தொழில்நுட்ப வசதிகளுடன் சந்தைகளை ஆக்கிரமித்ததால், கோடக் மிரண்டுபோனது தான் மிச்சம்.
கைகொடுக்கவில்லை பில்லியன் டாலர் கடனில் மூழ்கிய நிறுவனம், 2012 வாக்கில் 'சேப்டர் 11' திவால் நிலைக்கு விண்ணப்பித்தது.
இருப்பினும், 2000 மாவது ஆண்டுகளின் நடுப்பகுதியில், அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி அன்டோனியோ பெரெஸ், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து, பல சொத்துக்களை விற்றபோதும், அவரால் நிறுவனத்தின் வீழ்ச்சியைத் தடுக்க இயலவில்லை.
தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் கான்டினென்சா பொறுப்பேற்றபோது, கோடக்கை திவால் நிலையில் இருந்து மீட்க உறுதி கொண்டார்.
விளைவு, கேமராவில் இருந்து கவனத்தை திசைதிருப்பிய நிறுவனம், அச்சிடுதல், பேக்கேஜிங் மற்றும் சிறப்பு அச்சு ரசாயனங்கள் விற்பனை ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. ஆனாலும் துரதிருஷ்டம் அவை எதுவும் 'கிளிக்' ஆகவில்லை.
பலரது கனவுகளை வண்ணக்கலவையாக பளிச்சென படமெடுத்த கோடக் நிறுவனத்தின் எதிர்காலம், 133 ஆண்டுகளுக்கு பின் மங்கலாகிவிட்டதை, அதன் நிதிநிலை முடிவுகள் காட்டுகின்றன. இதனால், நிறுவனம் திவால் ஆகிவிடுமோ என்ற அச்சம் பிறந்துள்ளது.
பலரது கனவுகளை வண்ணக்கலவையாக பளிச்சென படமெடுத்த கோடக் நிறுவனத்தின் எதிர்காலம், 133 ஆண்டுகளுக்கு பின் மங்கலாகிவிட்டதை, அதன் நிதிநிலை முடிவுகள் காட்டுகின்றன.
19ம் நுாற்றாண்டில் ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவரால் துவங்கப்பட்டது கோடக் 1970களில் கேமரா உலகின் மன்னனாக, அமெரிக்காவில் கோலோச்சியது பின்னர் டிஜிட்டல் கேமரா, டச் மொபைல் போன் கேமரா வருகைகளால் ஒளிகுன்றியது ஏற்கனவே 2012ல் திவால் தாக்கல் செய்து திரும்பப் பெற்ற அனுபவமும் இதற்கு உண்டு