தாமதமாகும் கடன் மதிப்பெண் திட்டம்; அதிருப்தியில் தொழில் நிறுவனங்கள்
தாமதமாகும் கடன் மதிப்பெண் திட்டம்; அதிருப்தியில் தொழில் நிறுவனங்கள்
ADDED : மார் 07, 2024 01:28 AM

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியில் எளிதில் கடன் கிடைக்க உதவும், தமிழக அரசின் கடன் மதிப்பெண் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது, தொழில்முனைவோர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு, தொழில் நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பீட்டில் அதிக தொகை கடன் கிடைக்க, கடன் உத்தரவாத திட்டத்தை, 2022 ஆகஸ்டில் துவக்கியது.
அத்திட்டத்தின் கீழ், 40 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு அரசு வழங்கும் உத்தரவாதம், 75 சதவீதத்தில் இருந்து, 90 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
திட்டத்தின் மற்றொரு அம்சமாக, தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில், எளிதில் கடன் கிடைக்க, அரசு கடன் மதிப்பெண் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்கள் செலுத்திய ஜி.எஸ்.டி., வரி, சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் வரி உள்ளிட்ட அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரி மற்றும் கட்டணங்கள், குறித்த தேதியில் செலுத்துவதை கொண்டு மதிப்பெண் தயாரிக்கப்படும்.
அதிக மதிப்பெண் எடுக்கும் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, அரசு பரிந்துரை செய்யும்.
இதற்காக, மதிப்பெண் வழங்கும் மென்பொருளை, தமிழக அரசின் 'பேம் டி.என்' எனப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் நிறுவனம், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஆமதாபாத் உடன் இணைந்து உருவாக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், இத்திட்டம் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடன் கிடைப்பது எளிதாக இருக்கும் என தொழில்முனைவோர் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்களை தொழில் நிறுவனங்கள் செலுத்துவதை பொறுத்து, அவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்படும்

