ADDED : செப் 24, 2026 07:11 AM

புதுடில்லி: நாட்டின் தயாரிப்பு மற்றும் சேவை துறைகளில் தேவை அதிகரித்ததன் காரணமாக, தனியார் துறையின் வணிக நடவடிக்கைகள் செப்டம்பரில் கணிசமான வளர்ச்சியை எட்டியுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு மற்றும் சேவை துறைகளை உள்ளடக்கிய 'எச்.எஸ்.பி.சி., பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ.,' குறியீடு, ஆகஸ்டில் 54.3 புள்ளிகளாக இருந்தது. இந்நிலையில், செப்டம்பரில் 56.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்துக்கு பின், எட்டப்பட்ட அதிகபட்சம்.
தயாரிப்பு துறைக்கான பி.எம்.ஐ., குறியீடு 52.8 புள்ளிகளிலிருந்து 55.7 புள்ளிகளாகவும், சேவை துறைக்கான குறியீடு 54.1 புள்ளிகளிலிருந்து 55.8 புள்ளிகளாகவும் உயர்ந்துள்ளது.
இருப்பினும், ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த 33 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த வேகத்தில் வளர்ந்துள்ளன. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும்.
