ADDED : ஜன 03, 2025 01:27 AM

புதுடில்லி,:கடந்த டிசம்பர் மாதத்தில், நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி, ஒராண்டில் இல்லாத சரிவை கண்டுள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது. உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்கள் குறைந்ததே வளர்ச்சி சரிய முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. இதற்கான தரவுகளை எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா எனும் நிறுவனம், திரட்டி வருகிறது.
டிசம்பர் மாதத்துக்கான அதன் அறிக்கையில், தயாரிப்பு துறை பி.எம்.ஐ., குறியீடு கடந்த நவம்பரில் 56.50 புள்ளிகளாக இருந்த நிலையில், கடந்த மாதம் 56.40 புள்ளிகளாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் இடையேயான போட்டி மற்றும் விலை அழுத்தங்களும் வளர்ச்சி பாதிக்க வழிவகுத்ததாகவும், வரும் மாதங்களில் வளர்ச்சி மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

